அரசு மருத்துவமனையில் குவித்து வைக்கப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த மருத்துவமனைக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளவும், கொரோனா தொற்று பரிசோதனை செய்யவும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் கொரோனா வார்டில் பயன்படுத்தப்பட்ட மருந்துகள், முழுகவச ஆடைகள், மருத்துவ கழிவுகள் போன்றவற்றை மூட்டை மூட்டையாக கட்டி வைத்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்தும் முழு கவச ஆடைகள், ஊசிகள் மற்றும் மருந்துகள் போன்றவற்றை மூட்டை மூட்டையாக கட்டி மருத்துவமனை வளாகத்திலேயே குவித்து வைத்துள்ளனர். இவ்வாறு பல நாட்களாக அந்த கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. எனவே அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை குவித்து வைக்காமல் உடனடியாக அதனை அப்புறப்படுத்தி நோய் பரவுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.