16 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் அவரை கத்தியால் வெட்டி சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் சரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 10ஆம் தேதி சரத் 16 வயது சிறுமி ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அதன்பின் அந்த சிறுமியுடன் சரத் தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு சமைக்க தெரியாத காரணத்தால் சரத் அவரின் தலை, வயிறு, கை மற்றும் கால் ஆகிய இடங்களில் கத்தியால் வெட்டி சித்திரவதை செய்துள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த அந்த சிறுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சரத்தும், அவருடைய தாயார் தேசமாய் என்பவரும் இணைந்து சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, அடிக்கடி இவ்வாறு சித்திரவதை செய்தது தெரியவந்துள்ளது. அதன் பின் தாய் மற்றும் மகன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.