தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதிப்படுபவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். குறைந்த அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அவ்வாறு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களும், அவர்களது குடும்பத்தினரும் வெளியில் நடமாட கூடாது என்று அரசு எச்சரித்துள்ளது. ஆனால் சிலர் அதனை மீறி வெளியில் நடமாடுவதால் பலருக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு விடுகிறது. அதனை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினால் 2000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இரண்டாவது முறை வெளியே சுற்றினால் கொரோனா பாதுகாப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவர். வீட்டில் தனிமையில் உள்ள நோயாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். வெளியில் சுற்றுபவர்கள் குறித்து 044-25384520 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது.