உலகின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றாக சிறந்து விளங்குவது அமேசான் பிரைம் வீடியோ. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 17.5 கோடியை எட்டி இருக்கிறது. உலக அளவில் பார்க்கும் போது அதிக சந்தாதாரர்களை கொண்ட இரண்டாவது ஓடிடி தளம் இதுவே ஆகும். 20 கோடி சந்தாதாரர்களை பெற்று நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. அமேசான் பிரைம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத சந்தா, மூன்று மாத சந்தா மற்றும் ஒரு வருட சந்தா என்ற மூன்று விதமான சந்தாக்களை வழங்கி வந்தது.
இந்நிலையில் அமேசான் நிறுவனம் தனது அமேசான் பிரைம் தளத்தின் ஒரு மாத சந்தா திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. எனவே இந்திய வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் சந்தாதாரராக சேர வேண்டும் என்றால் மூன்று மாத சந்தா அல்லது ஒரு வருட சந்தாவில் மட்டும் தான் சேர முடியும். ஒரு மாத சந்தாவில் சேர இயலாது. ஒரு மாத இலவச டிராயலும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.