பிரிட்டனில் 5 வயது சிறுமி ஒருவர் இளவரசர் பிலிப் மறைவுக்கு பின் மகாராணியருக்கு ஆறுதல் கடிதம் எழுதிய நிலையில் அரண்மனையிலிருந்து அவருக்கு பதில் கடிதம் வந்துள்ளது.
பிரிட்டனிலுள்ள Scunthorpe என்ற பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமி Erin Bywater. இவர் பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமானதை அறிந்தவுடன், அவரது மனைவியான மகாராணியாருக்கு ஆறுதல் கூறும் வகையில் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், அன்பிற்குரிய மகாராணியார் அவர்களுக்கு, உங்களின் தொப்பிகள் மற்றும் ஆடைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
நீங்கள் வருத்தமுடன் இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். எனினும் எனது கடிதத்தால் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று எழுதியிருக்கிறார். அதன்பின்பு அதில் மகாராணியாரின் படத்தையும் வரைந்து அனுப்பியிருக்கிறார். ஆனால் சிறுமி சற்றும் எதிர்பாராத வகையில் அரண்மனையிலிருந்து மறுநாளே பதில் கடிதம் வந்திருக்கிறது.
அதில், என் கணவர் மறைவைத்தொடர்ந்து, நீங்கள் அனுப்பிய ஆறுதல் கடிதத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! இப்படிக்கு எலிசபெத். ஆர். என்று எழுதப்பட்டிருந்தது. இந்த கடிதம் கிடைத்தவுடன் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளார் அந்த சிறுமி. இதனை தன் நண்பர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் காண்பிக்க ஆவலுடன் உள்ளார்.
சிறுமியின் பெற்றோர் கூறுகையில், மகாராணியாருக்கு எவ்வளவு பணிகள் இருக்கும் என்பதை அறிவோம். எனினும் குழந்தையின் கடிதத்தை மதித்து பதில் கடிதம் அனுப்பியது ஆச்சர்யமாக உள்ளது என்று கூறியுள்ளனர்.