சில கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்டிபெட்டியில் இருக்கும் தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 1300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் சுமார் 120-க்கும் மேற்பட்ட ஒப்பந்த மற்றும் நிரந்தரப் பணியாளர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சில கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சாலையில் தொழிலாளர் சங்கத்தினர் மனு ஒன்றை அளித்துள்ளனர். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பணியாளர்கள் ஆலையின் வாயிலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் முழு ஊதியத்துடன் ஊரடங்கு காலத்தில் விடுமுறை வழங்க வேண்டும் எனவும், ஆலையை மூட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆலையில் பணிபுரிந்து உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் உயரதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மூலம் விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் ஆலை நிர்வாகத்தின் சார்பில் தொழிலாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.