கொரோனா தடுப்பு பணிக்காக இயக்குனர் வெற்றிமாறன் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.
இதனால் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகையால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பரவல் மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் தங்களால் முடிந்த நிதி உதவிகளை நன்கொடையாக வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி திரை நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் சிவகுமார் 1 கோடியும், பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 25 லட்சம் ரூபாயும், முன்னணி நடிகர் அஜித் 25 லட்சம் ரூபாயும் என பலர் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து 10லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.