தமிழகத்தில் கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. எனவே ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்தது. மக்கள் தனியார் நிறுவனங்களிடம் இருந்து விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஒரு சிலர் ஆக்சிஜன் சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
அதேபோல கொரோனா நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் ரேம்டெசிவர் மருந்துகளையும் பலர் கள்ளச் சந்தையில் விற்று வருகின்றனர். இந்நிலையில் மக்களின் உயிர்காக்கும் ரெம்டெசிவர் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்றால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.