டாஸ்மார்க் கடையின் காவலாளிகளை கட்டையால் தாக்கி கயிறால் கட்டிப் போட்டுவிட்டு ரூபாய் 73 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை ஒரு கும்பல் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 10-ஆம் தேதி முதல் வருகின்ற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதேபோல் கீரனூர் பகுதியைச் சேர்ந்த டாஸ்மார்க் கடையில் மைக்கேல்ராஜ் மற்றும் அந்தோணி ஆகிய இருவரும் இரவு காவலர் பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம். அவ்வாறு இரவுப் பணியின் போது டாஸ்மாக் கடைக்கு அருகிலுள்ள ஒரு கீற்று குடிசையில் இருவரும் படுத்து தூங்கி உள்ளனர்.
அந்த சமயத்தில் டாஸ்மாக் கடைக்கு அருகில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ஐந்து பேர் கொண்ட கும்பல் உடனடியாக குடிசைக்குள் நுழைந்து இருவரையும் கைகளால் கட்டி வாயை அடைத்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூபாய் 73 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். அதன்பின் இரண்டு காவலர்களும் தங்களுக்குள்ளாகவே கட்டப்பட்டுள்ள கயிற்றை அவிழ்த்துவிட்டு இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கடையின் மேலாளர் மற்றும் டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டாஸ்மார்க் கடையில் திருடிச் சென்ற கும்பலை 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.