கிராம புறப் பகுதிகளில் கொரோனா தொற்று குறித்து தீவிர விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மக்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இது மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் கிராமப் பகுதிகளில் வாழும் மக்கள் கொரோனா குறித்தும், தடுப்பூசிகள் குறித்தும் போதிய அளவு விழிப்புணர்வு இல்லாமல் இருந்து வருகின்றனர்.
அவர்களுக்கு கொரோனா தொற்று குறித்தும், தடுப்பூசி போடுவது அவசியம் குறித்தும் வலியுறுத்துவது மிகுந்த அவசியம். எனவே நாட்டின் கிராமப்புற பகுதிகளில் கொரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு, மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கிராமப்புற பகுதிகளில் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.