இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாட உள்ள தொடரில் வருண் சக்கரவர்த்தி இடம் பிடிப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது .
14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் , 30வது லீக் போட்டியில் பெங்களூர்- கொல்கத்தா அணிகள் மோத இருந்தன. ஆனால் கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்த வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால், அன்று நடைபெற இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. ஆனால் மறுநாள் டெல்லி அணி மற்றும் ஹைதராபாத் அணி வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்த நிலையில் முதலில் தொற்று பாதிப்பு ஏற்பட்ட வீரர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் இருவரும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுபற்றி பிசிசிஐ கூறும்போது, இருவரும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, உடல்நலம் குணமடைந்து உள்ளதையடுத்து ,இருவரும் வீடு திரும்பியுள்ளனர் என்று உறுதி செய்துள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு சென்று இந்திய அணி விளையாடும், புதிய தொடரில் வருண் சக்ரவர்த்தி இடம்பெறுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பாக கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில், வருண் சக்கரவர்த்தி விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் போட்டி நடைபெறுவதற்கு முன்பாக, அவருக்கு காயம் ஏற்பட்டதால் அந்த தொடரில் இருந்து விலகினார். தற்போது மீண்டும் இந்திய அணியுடன் விளையாடவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே இந்த தொடரில் ஸ்பின் பவுலராக வருண் சக்கரவர்த்தி, இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.