கணவன் இறந்த சிறிது நேரத்திலேயே மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள எண்ணூரில் தியாகராஜன் என்ற ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜலட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரை பார்ப்பதற்காக இவரது பிள்ளைகள் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கும்போது தந்தை தியாகராஜன் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தியாகராஜன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தியாகராஜன் இறந்த செய்தியை லட்சுமியிடம் கூறாமல் அவரது பிள்ளைகள் மறைத்து விட்டனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராஜலட்சுமியும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். கணவன் மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.