தமிழகத்திற்கு அடுத்த நான்கு நாட்களுக்குள் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. அதையடுத்து தமிழகத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் உள்ளதா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் தமிழக அரசு இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து தற்போது 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அடுத்த நான்கு நாட்களில் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் முக ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 400 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தமிழகத்திற்கு தேவைப்படுகிறது. அடுத்த இரண்டு வாரங்களில் ஆக்சிஜன் தேவை 840 மெட்ரிக் டன்னாக உயரும். தேசிய ஆக்ஸிஜன் திட்டத்தில் 220 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் ஒதுக்கியது துரதிஷ்டவசமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.