கணவனின் தலையில் இரும்பு குழாயால் அடித்து மனைவி கொலை செய்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கோவூர் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரிகளை வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கரின் தாய் மாங்காடு காவல் நிலையத்தில் தனது மகன் பாஸ்கர், மருமகள் உஷா மற்றும் குழந்தைகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போனவர்களை தேடி வந்த நிலையில், சிக்கராயபுரத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாஸ்கரின் சடலத்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவரது மனைவி உஷா மற்றும் 3 பேர் இணைந்து பாஸ்கரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பாஸ்கரின் மனைவி உஷா, அவரின் அண்ணன் பாக்யராஜ், அவரது நண்பர்களான கோகுல், வெங்கடேசன் போன்றோரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது பாஸ்கருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி உஷா சண்டை போட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபம் அடைந்த உஷா தனது வீட்டில் இருந்த இரும்பு குழாயால் பாஸ்கரின் தலையில் அடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் உஷாவின் அண்ணன் பாக்யராஜ், அவரது நண்பர்களும் இணைந்து பாஸ்கரை தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து இந்த கொலையை மறைப்பதற்காக நான்கு பேரும் இணைந்து காரில் பாஸ்கரின் உடலை எடுத்து சென்று அப்பகுதியில் உள்ள ஒரு குட்டையில் வீசி விட்டு தலைமறைவானது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.