முப்பந்தல் அருகே கொத்தனார் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி தெற்கு குமாரபுரம் மன்னராஜா கோவில் தெருவில் ஞானசேகர் என்ற கொத்தனார் வாழ்ந்து வந்தார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு தன்னுடைய குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ஞானசேகர் கண்ணுபொத்தை பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 30 ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது காவல்கிணறு, கலந்தபனை, மற்றும் அவரைக் குளம் போன்ற பகுதியை சேர்ந்த நான்கு நபர்கள் ஞானசேகருடன் கூட்டாளியாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ரயில்வே நிலையத்தில் மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் கொலை சம்பந்தமாக விசாரித்ததில், ஞானசேகர் மற்றும் அவரது கூட்டாளிகள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களின் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருக்கின்றன. இந்நிலையில் ஞானசேகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் ஒன்றுசேர்ந்து ஆரல்வாய்மொழியில் இருக்கும் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒன்றரை கிலோ மதிப்புமிக்க வெள்ளி கிரீடத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இதனையடுத்து வெள்ளி கிரீடத்தை பங்கு போடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஞானசேகர் மது போதையில் கூட்டாளிகளை கடுமையாக பேசியது மட்டுமில்லாமல், வீட்டில் இருக்கும் பெண்களை இழிவாக பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த நான்கு கூட்டாளிகளும் சேர்ந்து ஞானசேகரை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று, கொலை செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய நான்காவது நபர் தலைமறைவாக இருப்பதால் அவரை பிடித்த பிறகுதான் முழு விவரம் கிடைக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.