டெல்லி செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதால் அங்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் நாளை (ஆகஸ்ட்15) 73- ஆவது சுதந்திரதின விழா கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லி செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதால் அங்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி பெற்ற தேசிய பாதுகாப்பு படையினரும் மற்றும் கமாண்டோ படையினரும் செங்கோட்டையை சுற்றி முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதை தவிர்த்து 20,0000 காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டை பகுதியில் சந்தேகப்படும்படி நடமாடுபவர்களின் முகங்கள் நவீன மென்பொருள் மூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளின் பட்டியலுடன் ஒப்பீடு செய்து உடனுக்குடன் சரிபார்க்கப்படுகிறது. காஷ்மீர் விவகாரத்தால் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் இம்முறை வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் செங்கோட்டையை சுற்றி முழுவதும் அதிக திறன் வாய்ந்த 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதை தவிர்த்து குடியரசு தலைவர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லம் உள்ளிட்ட பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதே போல காஷ்மீரிலும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மும்பை, சென்னை போன்ற முக்கிய நகரங்களிலும் அதிகமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.