சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே கிராம மக்கள் வேறு கிராமங்களுக்கு குடிநீர் எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செங்கற்கோவில் கிராமத்தில் நீர் வளம் நன்றாக உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த கிராமத்தில் ஆழமான அளவில் கிராவல் மண் எடுக்கப்பட்டதால் நீரின் அளவு குறைந்து வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லங்குடி ஊராட்சிக்கு இந்த கிராமத்தில் இருந்து குடிநீர் எடுத்து செல்வதற்காக தற்போது அங்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு செயல்பட தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இங்கிருந்து இனிமேல் வேறு கிராமங்களுக்கு குடிநீர் எடுத்து செல்லக்கூடாது என்று அப்பகுதி கிராம மக்கள் ஒன்று திரண்டனர். மேலும் அவர்கள் எங்கள் கிராமத்தில் இருந்து குடிநீர் எடுத்து சென்றால் நீர்வளம் கேள்விக்குறியாகிவிடும் என்று குற்றம் சாட்டினர். அதனைத் தொடர்ந்து ஆழ்துளை கிணறு அமைப்பதையும் அவர்கள் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் அந்த கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.