கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்று பேர் பலியாகியுள்ள நிலையில் மேலும் பலரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தோனேசியா நாட்டில் சுமத்ரா தீவில் ஒரு மின் ஆலை செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலை சீனாவின் ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலையில் பல தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையில் சுமத்ரா தீவில் நேற்று முழுவதும் கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையால் அப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மின் ஆலை பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஆலைக்குள் பணிபுரிந்து கொண்டிருந்த 9 க்கும் அதிகமான தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கி கொண்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக போராடி வருகின்றனர். ஆனால் இதுவரையில் மூன்று பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மேலும் மண்ணுக்குள் புதைந்துள்ள மீதமுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.