இஸ்ரேலில் மத திருவிழாவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலில் லாக் பி ஓமர் என்கிற பெயரில் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் மத திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழா இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள புனித நகரமான மவுண்ட் மெரான் நகரில் உள்ள கல்லறையில் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் திரண்டு வந்து கொண்டாடுவர். இந்த திருவிழா கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு தடுப்பூசியின் வாயிலாக கொரோனா தொற்று குறைந்துள்ளதால் அந்நாட்டில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த திருவிழா நடைபெறுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் மாலை மக்களுடைய கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. மேலும் இரவு 10 மணிக்கு மேல் மக்கள் கல்லறைக்கு செல்வதற்காக படியில் ஏறிக்கொண்டிருக்கும் போது கூட்டத்தில் ஒருவரை ஒருவர் மிதித்து தள்ளிக் கொண்டு சென்றதால் பலர் படிக்கட்டுகளில் இருந்து சரிந்து மளமளவென உருண்டு விழுந்துள்ளனர். இதில் ஒருவர் காலுக்கடியில் ஒருவர் சிக்கி நசுங்கினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் உருவானது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. அந்நாட்டின் அதிபரான ருவன் ரிவ்லன் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.