லாரியை ஓட்டகொடுக்காத காரணத்திற்காக ஒருவர் மற்றொருவரை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஆர். எஸ். மடை என்ற பகுதியில் ஜெகதீசன் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வீரமணிகண்டன் என்ற ஒரு மகன் இருக்கின்றார். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து அப்பகுதியில் கருப்புசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் குமார் என்ற மகன் இருக்கின்றார். மேலும் வீரமணிகண்டன் லாரியில் சரக்குகளை ஏற்றி செல்லும்போது பிரவீன் குமாரை உடன் அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் வீர மணிகண்டன் தனது லாரியில் கரிமூட்டையை ஏற்றிக்கொண்டு போகும்போது பிரவீன் குமாரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த லாரி அம்மன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வீர மணிகண்டன் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி இந்த லாரியை பிரவீன்குமாரை ஓட்ட சொல்லி இருக்கிறார். ஆனால் பிரவீன்குமார் தான் லாரி ஓட்ட கேட்கும்போது நீங்கள் கொடுக்காமல் விட்டு விட்டீர்கள் அதனால் நான் இப்போது லாரியை ஓட்ட மாட்டேன் என்று மறுத்துள்ளார்.
இதனாலேயே வீர மணிகண்டனுக்கும் பிரவீன் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் கோபம் அடைந்த பிரவீன்குமார் வீரமணி கண்டனின் இருக்கைக்கு கீழ் இருந்த இரும்பு கம்பியை எடுத்து அவரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த வீரமணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வீரமணிகண்டன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார் இரும்பு கம்பியால் தாக்கி தப்பியோடிய பிரவீன்குமாரை கைது செய்து நடத்திய விசாரணையில் பிரவீன் குமார் மீது கொள்ளை, கொலை போன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் போலீசார் பிரவீன் குமாரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.