திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்கு தினமும் 200 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சிறப்பு மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 1,600-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் 270 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மக்கள் நெருக்கடி அதிகமாக உள்ள இடங்களில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதில் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் பரிசோதனை செய்யப்பட்டு தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் பணியை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் தீவிரப்படுத்தும் படி கமிஷனர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். அதன்படி மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையில் கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் நேற்று முந்தினம் திண்டுக்கல்லில் இந்திராநகர், திருமலைசாமிபுரம் ஆகிய பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.