கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் ஐந்து தலை வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமரன்(33). இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வேப்பத்தூர் பகுதியை சேர்ந்த சுவாதிக்கும்(24) கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சுவாதி கருவுற்ற நிலையில் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி இல்லாத நிலையில் குடந்தை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சுவாதி பிரசவத்திற்காக இரவு சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் இரவு 7.30 மணி அளவில் சுவாதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் குழந்தை இறந்த நிலையில் எடுக்கப்பட்டதால் பெண்ணின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலைமறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட சுவாதியின் உறவினர்கள் மருத்துவர் மற்றும் செவிலியரின் அலட்சியத்தின் காரணமாகவே குழந்தை இறந்து விட்டது. ஆகையால் குழந்தையை நாங்கள் பெற மாட்டோம் என கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.