இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியதை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் நீண்ட காலமாக நல்ல நட்புறவு நிலவி வருகிறது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இவர்கள் பேசியதை தொடர்ந்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் சில குறிப்புகளை பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது “நான் எனது நண்பரான ரஷ்ய அதிபர் புதினுடன் சிறந்த உரையாடலை தொலைபேசி மூலம் மேற்கொண்டேன். அதில் வளர்ந்து வரும் கொரோனா தொற்று பற்றி விவாதித்தோம்.
மேலும் தொற்றுக்கு எதிராக இந்தியாவின் போராட்டத்தில் ரஷ்யா உதவி மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தேன். மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, விண்வெளி ஆராய்ச்சி, ஹைட்ரஜன் பொருளாதாரம் உட்பட பல மாறுபட்ட துறைகளைப் பற்றி நாங்கள் விவாதித்து இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆராய்ந்தோம். மேலும் நோய் தொற்றை எதிர்த்து போராடுவதற்கு மனித குலத்திற்கு உதவும் வகையில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி ஒத்துழைப்பு அளிக்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
நமது வலுவான ராணுவ கூட்டாண்மைக்கு வலுசேர்க்கும் விதமாக ராணுவ மந்திரிகள் மற்றும் இரு தரப்பு வெளியுறவுத் துறையும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டோம்” இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார். மெங்கும் கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசி ரஷ்ய நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதிக செயல்திறன் கொண்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அடுத்த மாதம் இந்தியாவிற்கு இறக்குமதியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.