மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை அய்யனார் காலனியில் செல்வராஜ் என்ற தபால்காரர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் அப்பகுதியில் வசிக்கும் பரமசிவன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து இவர்களது மோட்டார் சைக்கிள் கோரம்பள்ளம் விலக்கில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் மற்றும் பரமசிவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.