முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து தனது முழு நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் மட்டுமில்லாமல் பிற மொழி படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தவகையில் பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘மேரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் ஒப்பந்தமாகியுள்ளார். இதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கப்பட இருந்தது. ஆனால் அப்போது நடிகை கத்ரீனா கைப்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் நடிகை கத்ரீனா கைப் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு பூரண உடல்நலம் அடைந்துள்ளார். இருப்பினும் தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருவதால் இப்படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.