அடகுக் கடை உரிமையாளரிடம் நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை கிராமத்தில் திரவியம் என்பவர் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வங்கியில் அடகு வைத்திருக்கும் நகைகளை கமிஷன் முறையில் மீட்டு பணம் பெரும் தொழிலும் செய்து வருகிறார். இதுகுறித்து அவர் ஆங்காங்கே விளம்பரமும் செய்துள்ளார்.
இந்த விளம்பரத்தைக் கண்டு மதுரையை சேர்ந்த வினோத் என்பவர் திரவியத்தை செல்போனில் தொடர்பு கொண்டு 10 பவுன் நகையை நிலக்கோட்டையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்து இருப்பதாகவும் அதனை மீட்பதற்கு 1 1/2 லட்சம் பணம் தேவைப்படுவதாகவும் அதனை மீட்டுத் தந்தால் கமிஷன் அடிப்படையில் பணம் தருவதாகவும் திரவியத்திடம் கூறியுள்ளார்.
இதனைக்கேட்ட திரவியம் கடந்த மாதம் 23 ஆம் தேதி நிலக்கோட்டையில் உள்ள வங்கிக்கு அருகில் வந்துள்ளார். அங்கு வினோத்தும் அவருடைய நண்பர்களும் நின்று கொண்டிருந்தனர். இதனை அடுத்து திரவியத்தை கண்டதும் வினோத் அவரிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு நகையை மீட்டு வருவதாக கூறி வங்கிக்குள் சென்றுள்ளார். அவர் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. மேலும் திரவியத்துடன் இருந்த வினோத்தின் நண்பர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த திரவியம் தனது நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பண மோசடி செய்த வினோத் மற்றும் அவருடைய நண்பர்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.