டிக் டாக் பதிவிடுவதில் ஏற்பட்ட மோதலில் மகள் மற்றும் தாய்க்கு இருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருடைய மனைவி இளஞ்சியம். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் இரண்டாவது மகளின் பெயர் திவ்யா. இவர் கள்ளச்சி என்ற பெயரில் டிக் டாக் செய்துவருகிறார். இந்த நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரன் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுகந்தி இருவருடனும் டிக்டாக்கில் திவ்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்களின் இந்தப் பழக்கம் நாளடைவில் டிக்டாக் பதிவிடுவதில் மோதலாக மாறி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்திரன் மற்றும் சுகந்தி ஆகிய இருவரும் திவ்யாவின் வீட்டிற்கு வந்து திவ்யா மற்றும் அவரது தாய் இளஞ்சியம் இருவரையும் அவதூறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து இளஞ்சியம் வல்லம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்திரன் மற்றும் சுகந்தி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.