தீயில் 6 வீடுகள் கருகி சாம்பலானதில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் கிராமத்தில் தமிழக அரசால் கடந்த 15 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளது. இந்த வீடுகள் பழுதடைந்து உள்ளதால் அவர்கள் வீடுகளுக்குப் பின்புறம் உள்ள காலி இடத்தில் தென்னங்கீற்று குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் செல்வம் என்பவரது வீட்டின் பின்புறத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவி மற்ற ஆறு வீடுகளுக்கும் பரவியுள்ளது.
இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 6 வீடுகள் எரிந்து சாம்பலானது. மேலும் மின்சாதன பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது, இதன் சேத மதிப்பு மொத்தம் 5 லட்சம் இருக்குமென கூறப்படுகிறது. ஆனால் தீ விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.