குமரியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் அழகிய மண்டபம் அருகே டெம்போவில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் பொருட்களான அரிசி, மண்ணெண்ணெய் போன்றவை கடத்தப்படுவதாக மாவட்ட அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மாவட்ட வருவாய்த்துறை சார்பில் பறக்கும்படை அதிகாரிகள் தாசில்தார் பாபு ரமேஷ், வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஜ்குமார், டேவிட் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் வகையில் டெம்போ ஒன்று சாலையோரமாக நின்று கொண்டிருந்தது. அந்த டெம்போவை சோதனை செய்வதற்காக அதிகாரிகள் சென்றபோது அதிலிருந்து இரண்டு நபர்கள் தப்பி ஓடினர்.
இதனையடுத்து டெம்போவில் அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் மூன்று மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனைதொடர்ந்து டெம்போவில் இருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, உடையார்விளை அரசு சுங்கச்சாவடியில் ஒப்படைத்தனர். அதன்பிறகு டெம்போவை பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த டெம்போ யாருடையது என்றும் அதிலிருந்த ரேஷன் அரிசியை கடத்திவிட்டு தப்பிஓடிய மர்மநபர்களின் விவரம் குறித்தும் தீவீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.