புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் துணையாக இருந்த அவரது 15 வயது தம்பியும் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி அருகே பொறையூர் சுடுகாட்டில் நேற்று முன்தினம் இரவு ராஜஸ்ரீ என்ற கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சாக்குமூட்டையில் கட்டி மர்ம நபர்கள் வீசி சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பிரதீஸ் என்ற இளைஞரை அம்மாணவி கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததும் பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் பிரதீஸை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது பல உண்மைகள் வெளி வந்தது. ராஜஸ்ரீயை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுடுகாடு அருகே பீர் பாட்டில் மற்றும் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்ததாக ஒத்துக் கொண்டார். கொலைக்கு வேறு யாராவது உதவினார்களா என்று விசாரணை நடத்தியதில் அந்த கொலை சம்பவத்திற்கு அவரது தம்பி உடந்தையாக இருந்ததாகக் கூறினார் . இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.