முழு ஊரடங்கு போடுவதை தவிர்த்து விட்டு கிராமம் முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டும் என கே.எஸ் அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, முழு ஊரடங்கு என்பது தீர்வாகாது. தமிழக காங்கிரஸ் கட்சி தமிழக அரசுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் முழு ஊரடங்கு என்கின்ற சித்தாந்தத்தை தயவு செய்து கைவிட்டுவிடுங்கள். அது தமிழக மக்களுக்கு பயனளிக்காது. ஏன்னென்று சொன்னால சென்ற முறை நாம் பார்த்தோம் ….. முழு ஊரடங்கு என்று வந்தால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் கூலி தொழிலாளர்கள், 8 கோடி தமிழர்களில் மூன்றரை கோடி தமிழர்கள் கூலித் தொழிலாளர்கள்.
இன்றைக்கு வேலைக்கு சென்றால் தான் அவர்கள் வீட்டில் சாப்பாடு. எனவே மூன்றரை கோடி மக்களுக்கு உணவு வழங்குவதற்கு தமிழக அரசாங்கத்தால் முடியாது. அடுத்ததாக பேருந்து ஓட்டுபவர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், டாக்ஸி ஓட்டுபவர்கள், லாரி ஓட்டுபவர்கள், இன்னும் கிராமப்புறங்களில் வயல்வெளி வேலை செய்பவர்கள் இவர்கள் எல்லாம் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே முழு ஊரடங்கு என்பது தீர்வாகாது. அப்படி என்றால் என்ன செய்வது ? மக்கள் எல்லோரும் இதில் ஒத்துழைக்க வேண்டும்.
நான் வெறும் அரசியல் மட்டும் சொல்ல விரும்பவில்லை. அதனால் தான் இன்றைக்கு உதவி மையம் திறந்து இருக்கிறோம். தமிழகத்தில் இருக்கிற லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் மற்றும் இருக்கிற சுய சேவை அமைப்புகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள். கிராமப்புறங்களில் ஆசிரியர்களுக்கு மிகுந்த மரியாதையும் செல்வாக்கும் உண்டு. எனவே ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கிற ஆசிரியர்கள் அந்த கிராமத்தில் நல்ல பிரச்சாரம் செய்ய வேண்டும்.
வேறு எதுவும் செய்ய வேண்டாம் தடுப்பூசி போட சொல்லுங்கள், முகக்கவசம் அணிய வலியுறுத்தல், குறைந்தபட்சம் இடைவெளியோடு வாழ சொல்லுங்கள் இந்த மூன்றுதான் நம்மை காப்பாற்றும். உலக சுகாதார நிறுவனம் அதைத்தான் திரும்பத்திரும்ப சொல்கிறது. எனவே இந்த மூன்று இந்திய மக்களிடம் தமிழக மக்களிடம் நாம் பரப்புரை செய்தால் அது மிகுந்த நன்மையை தரும். முதலில் நாம் அதை கடைபிடிக்க வேண்டும். கிராமப்புறங்களில் ஆசிரியர்கள் செய்ய வேண்டும்.
ஆசிரியர்கள் செல்வாக்குமிக்க ஒரு தரப்பினர் அவர்கள் செய்யவேண்டும், பால்வாடி ஆயாக்கள் செய்யவேண்டும், இதே மாதிரி அந்த கிராமத்தில் இருக்கக்கூடிய VAO, அந்த பகுதியில் இருக்கக்கூடிய போலீஸ் அதிகாரி, இவர்களின் கரங்களில் தமிழக அரசு இந்த பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இவர்களெல்லாம் செய்யவேண்டியது முயன்றவரை அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்காக முயற்சியை, முகக்கவசம் அணிதற்கான முயற்சி, கை கழுவுவதற்கான பழக்கவழக்கங்கள், தனிமைப்படுத்துவது இவைகளை ஒரு கிராமத்தில் நாம் செய்தால் தமிழகத்தில் எல்லா கிராமங்களிலும் இது நடந்து விடும். இது ஒரு மக்கள் இயக்கமாக மாறி விடும் என கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.