Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இலங்கை தமிழர்கள் இழுத்துச்செல்லப்பட்டு பலி.. பணி முடித்து திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்..!!

ஈரோடு மாவட்டத்தில் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த இளைஞர்கள் பணி முடித்து திரும்பியபோது வாகனம் மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் என்ற இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் பொன்மனச் செல்வன் (21), பிரதீபன் (16) மற்றும் முருகேஷ் (21) ஆகிய 3 இளைஞர்களும் பெயிண்டிங் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் கடந்த சனிக்கிழமை அன்று பண்ணாரிக்கு பணிக்காக சென்றிருக்கின்றனர்.

அதன் பிறகு நள்ளிரவு நேரம் வரை பணி செய்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலையில் தங்களது இருசக்கர வாகனத்தில் மூவரும் முகாமிற்கு வந்துகொண்டிருந்துள்ளனர். அப்போது கொத்தமங்கலம் மொக்கை என்ற இடத்திற்கு அருகில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென்று அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று இவர்கள் மீது மோதியுள்ளது.

இதில் மூவரும் தூரமாக இழுத்துச் செல்லப்பட்டு, பொன்மனச்செல்வன் மற்றும் பிரதீபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் முருகேஷ் படுகாயமடைந்துள்ளார். இவரை அங்கிருந்த மக்கள் உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இக்கொடூர விபத்து தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |