பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே காணாமல் போன விவசாயி குளத்தில் சடலமாக மிதந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நமையூர் கிராமத்தில் ராஜேந்திரன் என்னும் விவசாயி வசித்து வந்தார். இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பச்சையம்மாளும், ராஜேந்திரனும் வயலுக்கு சென்றுள்ளனர். அங்கு ராஜேந்திரன் உழவுக்காக டிராக்டரை அழைத்து வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகத்தின் பேரில் பச்சையம்மாள் மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் ராஜேந்திரனை தேடி வந்தனர்.
இந்நிலையில் விவசாயி ஒருவருடைய மாடு நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் மூழ்கி செத்தது. இதனால் மாட்டின் உடலை அங்கிருந்தவர்கள் மீட்க முயற்சி செய்தனர். அப்போது அந்த குளத்தில் ராஜேந்திரன் சடலமாக மிதந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த மங்களமேடு காவல்துறையினர் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் குளத்தில் சடலமாக மிதந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.