நகைச்சுவை நடிகர் விவேக் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய மன்சூர் அலிகான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள் மாரடைப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்தநிலையில் செய்தியாளர்களிடம் நடிகர் மன்சூர் அலிகான் பேசியபோது “சும்மா இருந்த விவேக்கை தடுப்பூசி போட வைத்து கொன்றுவிட்டீர்கள். எனது ரத்தம் கொதிக்கிறது. கொரோனா டெஸ்ட் தப்பா எடுக்கிறீர்கள்.
அதற்கு மருந்தும் தப்பா கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். கொரோனா என்று ஒன்று இல்லவே இல்லை. அவ்வாறு இருக்கிறது என்று கூறுபவர்கள் அனைவருக்கும் ரூபாய் ஒரு லட்சத்தை கொடுங்கள். இல்லையென்றால் அது வரவே இல்லை என்று அறிவியுங்கள். மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அனைவருக்கும் 100 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் கொடுங்கள். பெருந்தொற்று என்று கூறிய அனைவறையும் பயப்படும்படி செய்கிறீர்கள்” என அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து விவேக் மரணம் கொடுத்து சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது பாஜகவின் பாரதப் பிரதமர் மக்கள் நலத்திட்டங்கள் பிரச்சார விளம்பர அமைப்பின் செயலாளர் ராஜசேகரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் நடிகர் விவேக் உயிரிழந்ததாகவும் சுகாதாரத்துறை செயலாளர் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதாலும் பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசியதாலும் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியதாயிற்று என அவர் கூறியுள்ளார்.