முன்னணி காமெடி நடிகர் யோகிபாபு நட்பிற்காக சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார்.
சக்தி வாசன் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நாயே பேயே’. பிரபலப் படதொகுப்பாளரான கோபிகிருஷ்ணா இப்படத்தினை தயாரித்துள்ளார். ஐஸ்வர்யா,புச்சி பாபு, கிரிஷ் உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பிரபல காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு இப்படத்தில் இடம் பெற்றுள்ள விளம்பர பாடலில் நடனமாடியுள்ளார்.
சமீபத்தில் வெளியான இந்த வீடியோ காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. கலகலப்பான குடும்ப படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 23ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் கோபிகிருஷ்ணா கூறியதாவது,பிரபல காமெடி நடிகர் யோகிபாபு இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தோம்.
ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அது முடியாமல் போனது. அதன் பிறகு இப்படத்தில் அவரது பங்களிப்பு ஏதாவது இருக்க வேண்டும் என்று அவரே கூடிய ஐடியாவின் படிதான் இந்த விளம்பர பாடலில் அவர் நடித்துள்ளார்.ஒரு நாள் முழுக்க எங்களுடன் இருந்து நடித்துக் கொடுத்தவர் சம்பளம் கூட வாங்கிகொள்ளவில்லை.
மேலும் கேரவன் வசதி கூட வேண்டாம் என்று கூறி மறுத்துவிட்டார். நானும் தினேஷ் மாஸ்டரும் யோகி பாபுவின் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அவர் எங்களுக்கு இந்த உதவியை செய்து கொடுத்துள்ளார். அவரது பிஸியான நேரத்திலும் எங்களுக்கு இதை செய்து கொடுத்ததை நாங்கள் மறக்க மாட்டோம்.
யோகி பாபு மட்டுமின்றி பிக்பாஸ் பரணி, சக்தி சரவணன், டைகர் தங்கதுரை, லொள்ளு சபா ஜீவா ஆகியோரும் சம்பளம் வாங்கிக் கொள்ளாமல் நடித்து மட்டும் கொடுத்துள்ளனர். இவர்களது உதவி இப்பாடலுக்கு பெரிதும் உதவியாக உள்ளது என்று கூறியுள்ளார்.