வங்கதேசத்திலிருந்து சிறுமியை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தம்பதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று கடத்தல் மற்றும் சிறுவர்களை, தவறாக பயன்படுத்துதல் போன்ற குற்றங்களின் கீழ் Special Operation Team அதிகாரிகள், ஹரி ஃபுல் செய்க் (36) அவரின் மனைவி அஜ்மிரா கதுன்(32) மற்றும் ஏஜெண்ட் முதுர்ஷா ஷேக்(31) ஆகிய மூவரை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஹரி ஃபுல் மற்றும் அவரின் மனைவி இருவரும் வங்கதேசத்திலிருந்து சூரத் மாவட்டத்திலுள்ள கொல்வாட் கிராமத்தில் சட்டவிரோதமாக குடியேறி வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியால் தவித்து வந்த இவர்கள், தங்கள் நாட்டிலிருந்து ஒரு பெண்ணை கடத்தி பணத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி அங்கலேஸ்வரரை சேர்ந்த ஏஜென்ட் முதுர்ஷாவை அணுகியிருக்கிறார்கள். அவர் வங்கதேசத்திலிருக்கும் கிராமங்களில் தேடி, 17 வயதுடைய ஒரு சிறுமியை 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து கடத்தி வந்திருக்கிறார். மேலும் இந்தியாவின் எல்லைக்கு சிறுமியை கொண்டு வருவதற்காக மற்றொரு ஏஜென்டிற்கு 4000 ரூபாய் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அதிகாரிகள் சனிக்கிழமையன்று இந்த மூவரையும் கைது செய்து, அந்த சிறுமியையும் மீட்டு, சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுதொடர்பாக சூரத் போலீஸ் கமிஷனர் அஜய் தோமர் கூறியுள்ளதாவது, தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் இவர்கள் வேறு ஏதேனும் சிறுமிகளை கடத்தி வைத்துள்ளார்களா? என்பது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.