பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு வாரம் ஓய்வெடுக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதேபோல இந்நிகழ்ச்சி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கன்னடத்தில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் நடைபெற்று வருகிறது.
இதனை பிரபல நடிகர் சுதீப் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் அவரை ஒரு வாரம் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அடுத்த ஒரு வாரத்திற்கு சுதீப் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சுதீப் கூறியதாவது,நான் மருத்துவர்களின் ஆலோசனைப்படி கட்டாயம் ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கிறது. ஆகையால் வரும் வாரம் நானும் பார்வையாளர்களை போல வீட்டில் அமர்ந்து யார் வெளியே இருக்கிறார்கள் என்பதைக் காண ஆவலுடன் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
சுதீப் ஒரு வாரம் ஓய்வெடுக்க இருப்பதால் தற்போது இந்நிகழ்ச்சியை எந்த பிரபலம் தொகுத்து வழங்கப் போகிறார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆகையால் இதனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.