“எம்.ஜி.ஆர் மகன்” திரைப்படம் எப்படி இருக்கும் என்று இயக்குனர் பொன்ராம் கூறியுள்ளார்.
ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “எம்.ஜி.ஆர் மகன்”. சத்யராஜ், சசிகுமார், மிருணாளினி, சரண்யா பொன்வண்ணன் சமுத்திரகனி, சிங்கம் புலி உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் பொன்ராம் கூறியதாவது, ஒரு சிறிய விஷயத்திற்காக பேசிக் கொள்ளாமல் இருக்கும் தந்தையும், மகனும் எப்படி ஒன்றிணைகிறார்கள் என்பது குறித்தே இந்த கதை. தந்தையாக சத்யராஜும், மகனாக சசிகுமாரும், தாயாக சரண்யா பொன்வண்ணனும், தாய் மாமனாக சமுத்திரகனியும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
சத்யராஜ் எம்ஜிஆர் என்று அனைவராலும் அழைக்கப்படும் கிராமத்து வைத்தியர் எம்ஜி ராமசாமியாக நடித்துள்ளார். சசிகுமார் அன்பளிப்பு ரவி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிருணாளினி, சத்யராஜ் மற்றும் சசிகுமாரின் சண்டையில் எப்படி நுழைகிறார் என்று சுவாரசியமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படம் முழுவதும் சமுத்திரக்கனி அரை டவுசருடன் வித்தியாசமான அக்னி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.தற்போது திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 100 சதவீத பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் அளிக்கும் படமாக இது உருவாகி உள்ளது.மேலும் சென்டிமெண்ட், நகைச்சுவை என அனைத்து அம்சங்களும் கலந்த இத்திரைப்படம் ரசிகர்களின் மனதை கட்டாயம் கவரும் என்று கூறியுள்ளார்.