மயிலாடுதுறையில் முன்னாள் ராணுவ வீரரை கல்லால் தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவிழந்தூர் நீடூர் மெயின் ரோட்டில் ரூபன் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். அவர் முன்னாள் ராணுவ வீரராக பணி புரிந்தவர். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறை நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அரசு மருத்துவமனை சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது இரண்டு பேர் 4 கால் மண்டபம் அருகே சாலை குறுக்கே நின்று கொண்டிருந்தனர். அப்போது ரூபன் சார்லஸ் ஓரமாக நின்று பேசுங்கள் என்று அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த அவர்கள் 2 பேரும் ரூபன் சார்லஸை மோசமாக திட்டியுள்ளனர்.
மேலும் கற்களால் அவரை தாக்கியுள்ளனர். அதில் ரூபன் சார்லஸ்க்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ரூபன் சார்லஸ் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் திருவிழந்தூர் தோப்பு தெருவில் வசித்து வரும் ராமசாமி என்பவரது மகன் சாமிநாதன் (39) , அதே பகுதியில் வசித்து வரும் கோவிந்தராஜன் என்பவரது மகன் ராஜேந்திரன் (38) ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.