கொரோனா நோய் தொற்று காரணமாக மேற்கு வங்காளத்தில் இரவு 7 மணி முதல் காலை 10 மணி வரை பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை செய்துள்ளது.
இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக பிரிக்கப்பட்டு நடந்து வருகிறது. அதில் 4 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் 5-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற 22, 26 மற்றும் 29ஆம் தேதிகளில் மீதமுள்ள மூன்று கட்ட வாக்குப்பதிவு தேர்தல் நடக்க உள்ளது.
இந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோய் பரவல் 2-வது அலை அதிகரித்து வருகின்றது. அதிலும் மேற்கு வங்காளத்தில் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தலைமை தேர்தல் கமிஷன் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. அதிலும் முக்கியமாக தேர்தல் பிரசார நேரத்தை அதிரடியாக குறைப்பு அமுல் படுத்தியுள்ளது.
இந்த வகையில் தேர்தல் பிரசாரம் செய்ய இரவு 7 மணியிலிருந்து காலை 10 மணிவரை தடை விதித்துள்ளது. அந்த நேரத்தில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட எந்தவித பிரசார முறையும் செய்ய கூடாது என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்பின் பிரசாரம் முடிக்கும் காலத்தையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவுகளுக்கும் 72 மணி நேரத்துக்கு முன்பு பிரசாரத்தை முடித்துக்கொள்ள தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.