சுவிற்சர்லாந்தில் ஒரு மருத்துவர் மக்களிடையே கொரோனா பற்றி தவறான கருத்துக்களை பரப்பியதால் நீதிமன்றம் அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சுவிற்சர்லாந்தில் உள்ள லூசெர்ன் மண்டலத்தில் இருக்கும் Ebikon பகுதியில் ஒரு மருத்துவர் கொரோனா குறித்து தவறான கருத்துக்களை பொது மக்களிடம் பரப்பி வந்துள்ளார். இதுமட்டுமல்லாமல் மண்டலத்தின் நிர்வாகம் கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை கடும் விமர்சனம் செய்து வருகிறார்.
மேலும் தன் சுகாதார மையத்தில் நோயாளிகளை முகக்கவசம் அணியாமல் சந்தித்துள்ளார். அதாவது அவர், கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பொதுமக்களிடம் பயத்தை ஏற்படுத்துகிறது, என்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியமற்றது என்றும் இவை அனைத்தும் அப்பாவியான பொது மக்களை ஏமாற்றுவதற்காக செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் கொரோனா தொற்று குறித்து நாம் பயப்படத் தேவையில்லை என்று பொதுமக்களிடம் கூறியுள்ளார். இந்நிலையில் குறிப்பிட்ட சமூகம் அவருடைய மருத்துவர் உரிமத்தை ரத்து செய்து விட்டது. இந்நிலையில் லூசெர்ன் மண்டல அதிகாரிகள், கடந்த பிப்ரவரி மாத இறுதியில் முன்னெச்சரிக்கையாக அந்த மருத்துவரின் உரிமத்தை வாபஸ் பெற்றுவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து, அந்த மருத்துவர் உரிமத்தை மீட்டு தரக்கோரி மண்டல நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். ஆனால் நீதிமன்றம் லூசெர்ன் மண்டல நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளை உறுதி செய்தது. அதன் பின்பு நீதிமன்றத்தால் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. எனினும் அவர் பெடரல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.