பெரம்பலூர் மாவட்டம் உழவர் சந்தையில் முககவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை பகுதியில் இயங்கி வரும் உழவர் சந்தை இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. கொரோனா தொற்று 2-வது அலை தற்போது பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பொது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதார துறையினர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதை தொடர்ந்து உழவர் சந்தையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் மக்கள் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்காக அதிகமாக வருகின்றனர்.
இதனால் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கவும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் வடக்குப்புற கதவு உழவர் சந்தையில் அடைக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் காய்கறி மற்றும் பழங்கள் வாங்க செல்ல மேற்குப்புறத்தில் உள்ள நுழைவாயில் வழியே அனுமதிக்கப்பட்டனர். கிருமிநாசினிகள் கொண்டு அனைவரும் கைகளை சுத்தம் செய்த பிறகு சந்தைக்குள் முக கவசத்துடன் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் முககவசம் இல்லாமல் சந்தைக்கு வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் கபசுர குடிநீர் உழவர் சந்தை வளாகத்தில் வழங்கப்பட்டது. பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வரும் போது தினமும் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று அதன் நிர்வாக அலுவலர் தெரிவித்தார்.