கர்ணன் படத்தை பார்த்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், எவ்வளவு பாராட்டினாலும் இந்த படத்தை இயக்கிய என்னுடைய தம்பி மாரி செல்வராஜ் அவரோடு ஒத்துழைத்த, ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் எல்லாருமே இந்த கதாபாத்திரத்தோடு ஊன்றிப் போய் ஒவ்வொரு நொடியும் நமக்கு பதற்றத்தை தரும் அளவிற்கு அந்த திரைக்கதை திருப்பம். இவ்வளவு சிறப்பா இந்த படம் வந்து இருக்கிறது. அதை உளமார நான் பாராட்டுகிறேன். அதே நேரம் மாரி செல்வராஜ் அவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.
அதேநேரம் பொறாமையும் படுவேன்… இப்படி ஒரு படைப்பை எந்தக் கலைஞனும் பார்த்தால் நான் படைக்கவில்லை என்று நினைப்பார். அந்த அளவு ஒரு சிறந்த படைப்பை, ஆகச்சிறந்த ஒரு படைப்பை கொடுத்த தம்பி மாரி செல்வராஜ் அவர்களுக்கு என் மனப்பூர்வமான, உளப்பூர்வமான பாராட்டு. சிறந்த படைப்பாளிக்கு நல்ல தயாரிப்பாளர் கிடைப்பது இல்லை. நல்ல தயாரிப்பாளருக்கு சிறந்த படைப்பாளர் கிடைப்பதில்லை. இது ஒரு முரண். இது ஒரு சாபக்கேடு. உலகமே வர்த்தக உலகமாக மாறிவிட்டது. நம் நாடே ஒரு சந்தையாக மாறிவிட்டது. அதில் இது பெரிய வர்த்தகம் உள்ள ஒரு சந்தையாக இருக்கிறது.
அந்த சந்தையில் இந்த கலை, படைப்பு அதில் நோக்கம் எல்லாம் இல்லை. இங்கே பொழுதைப் போக்குவதற்கு தான் வேலை இருக்கிறது. பொழுதை நல்ல பொழுதாக ஆக்குவதற்கான இடமாக இல்லை. இப்பொழுது மாறிக்கொண்டு இருக்கிறது. காக்கா முட்டை படத்தை பேசினோம், அறத்தை பேசினோம், அப்படி பேசுவதற்கு படம் வருகிறது. தம்பி செழியன் உடைய குரு லெட்டர் பேசினோம், ராஜ் முருகனுடைய ஜோக்கர் பேசினோம், அப்புறம் மேற்கு தொடர்ச்சி மலையை பேசினோம், பரியேறும் பெருமாள் பேசினோம்.
இப்படி அங்கங்கே சில அபூர்வமான படைப்பாளிகள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை வீழ்த்தாமல் வாழ்த்தி தள்ளி விடுகின்ற பொறுப்பு நாம் ஒருவருக்கும் இருக்கிறது. அது என்ன செய்வது ? இதுக்குள்ள தான் நாம் வேலை செய்து ஆகவேண்டும் என சீமான் தெரிவித்தார்.