Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இனியும் பாதிப்பை தாங்கும் சக்தி யாருக்கும் இல்லை”… இசை-நாடக கலைஞர்கள் கோரிக்கை மனு..!!

காரைக்குடியில் இசை, நாடக கலைஞர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி ஊர்வலமாக சென்றனர்.

காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நாடக, இசை சங்கத்தின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதற்கு பி.எல்.காந்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் நாடக கலைஞர்கள், இசை, ஒலி, ஒளி அமைப்பாளர்கள், இத்தொழில் சார்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் கொரனோ தொற்றால் அவசர நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது. அதிலிருந்து நமது சங்கத்தினருக்கு தளர்வுகள் வழங்க வேண்டும். அதை அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதனையொட்டி புதிய பேருந்து நிலையத்தில் அனைவரும் ஒன்று கூடினர். அங்கிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தலைவர் பி.எல்.காந்தி மற்றும் நிர்வாகிகள் தலைமையில் கோஷமிட்டு, கோரிக்கைகள் எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்தி தாலுகா அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்றனர். அதன் பின்னர் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருணிடமும், தாசில்தார் அந்தோணிராஜிடமும் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;-

கடந்த வருடம் எங்கள் தொழில் கொரோனாவால் அரசு அறிவித்த நடவடிக்கை காரணமாக முற்றிலுமாக முடங்கியது. சக தோழர்களையும் வறுமையால் இழந்தோம். வாழ்வாதாரத்தை இழந்து வழிவகை எதுவுமின்றி தவித்தோம். இந்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது மீண்டும் அரசு சில அவசர உத்தரவுகளை கொரோனா காரணமாக பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து 1 1/2 வருடங்களாக குடும்பத்தை காப்பாற்ற முடியாமல், தொழில் செய்ய முடியாமல், முதியவர்களுக்கு மருத்துவ உதவி கூட செய்ய முடியாமல் தவித்தோம். மேலும் பாதிப்புகளை தாங்கும் சக்தி எவருக்கும் இல்லை. ஆதலால் எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற அரசு எங்களுக்கு சில தளர்வுகளை தந்து உதவ வேண்டும். கூத்து நாடகங்கள், திருவிழாக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |