இரவு நேர நிகழ்ச்சிகள் கோவில் திருவிழாக்களில் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் காளி வேடம் அணிந்து வந்து மனு கொடுத்தனர்.
அனைத்து நாட்டுப்புற, நாடக கலைஞர்கள் சிவகங்கை மாவட்ட நாட்டுப்புற இசை கலைஞர்கள் சங்க தலைவர் ஆல்பர்ட்ராஜ் தலைமையில் நூதன முறையில் காளி வேடம் அணிந்து நாதஸ்வரம், தவில் இசைத்து ஆட்டம் ஆடி வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது;-
கிராமபுற கோவில்களில் பங்குனி, சித்திரை மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த திருவிழாக்களை நம்பி தான் தவில், நாதஸ்வர கலைஞர்கள், மேடை நாடகங்கள், மைக்செட் அமைப்பவர்கள் என ஏராளமானோர் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு தற்சமயம் கொரோனா தொற்று காரணமாக திருவிழாக்களுக்கு தடை விதித்துள்ளது.
இதனால் கலைஞர்கள் அனைவரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும் இரவு விதித்திருக்கும் தடையை தளர்த்தி இரவு நேர நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். தமிழக அரசு ரூ. 2 ஆயிரம் நிவாரண தொகை அறிவித்துள்ளது. அதனை மாற்றி ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.