சவுதியில் இருக்கும் முக்கிய தளங்களில் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹவுத்திகள் போராளிகள் குழு தெரிவித்துள்ளது.
ஹவுத்தி போராளிகள் குழு, ஜெட்டாவில் இருக்கும் சவுதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஜுபிலை குறிவைத்து சுமார் பத்து ட்ரோன்கள் ஏவியது உட்பட 17 ட்ரோன்கள் வைத்து சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும் Al Masirah தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில், சவுதி அரேபியாவை ஹவுத்திகள் இரு பிளாஸ்டிக் ஏவுகணைகள் கொண்டு தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆனால் சவுதி அரேபியா இது தொடர்பில் உடனடி தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் சவுதியின் தலைநகரான ரியாத்தில் ட்ரோன் கொண்டு முக்கிய தளங்களில் தாக்குதல் நடத்தியதாக ஹவுத்தி குழு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் 22ஆம் தேதியன்று சவுதி அரேபியா ஏமனில் தெளிவான ஐ.நா ஆதரவுடன் போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தத்தை முன்வைத்தது. எனினும் சவுதி, விமான நிலையங்கள் மற்றும் ஏமன் துறைமுகங்கள் மீதுள்ள பொருளாதார தடைகளை முதலில் நீக்க வேண்டும் என்று ஹவுத்திகள் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.