அரக்கோணம் படுகொலையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், மதவாத சக்தியாக இருக்கிற பாஜக என்கிற ஒரு அமைப்பு, தமிழ்நாட்டுக்குள் கால் ஊன்றுவது ஒட்டுமொத்த தமிழ் தேசத்திற்கே பேராபத்து விளையும் என்பதை முன்கூட்டியே சுட்டிக்காட்டிய இயக்கம். வெறும் மொழி உணர்வும், இன உணர்வும் தமிழ் தேசியமாகாது.
சனாதன எதிர்ப்புக்குள் தான் தமிழ் தேசியம் இருக்கிறது. சனாதன எதிர்ப்புக்குள் தான் சமூகநீதி இருக்கிறது. சாதிவெறி, மதவெறி எதிர்ப்பில் தான் தமிழ் தேசியம் இருக்கிறது. சாதிவெறி, மதவெறி, எதிர்ப்புக்குள் தான் சமூகநீதி அரசியல் கிடக்கின்றது. இதை தத்துவார்த்த அடிப்படையில் நுட்பமாக உணர்ந்து கொண்ட ஒரே இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி.
அரைவேக்காடு வேண்டுமென்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை விமர்சிக்கலாம். அவர்களோடு எங்களோடு கொள்கை சார்ந்து விவாதிக்க தகுதியற்றவர்கள். தமிழ் தேசியமாக இருந்தாலும் சரி, சமூகநீதி அரசியலாக இருந்தாலும் சரி, விடுதலைச் சிறுத்தைகளோடு தத்துவார்த்தமாக பேச இங்கு எவனுக்கும் தகுதி இல்லை, தமிழ்நாட்டில் எவனுக்கும் தகுதி இல்லை.
வெறும் மொழி வெறியும், இனவெறியும் தமிழ் தேசியம் ஆகாது. வெறும் இட ஒதுக்கீட்டு உணர்வு மட்டுமே சமூக நீதி ஆகாது. எங்களுக்கு இத்தனை சதவீதம் சீட்டு வேண்டுமென்பது சமூக நீதி அரசியல் அல்ல, அது பங்கு போடும் சண்டை அது. சமூகநீதி என்பது தத்துவம், அது ஒரு கோட்பாடு. அது சனாதன எதிர்ப்புக்குள்ளே இருக்கிறது, நுட்பமாக இருக்கிறது, நுட்பமாக உறைந்து கிடக்கிறது, அதை புரிந்து கொள்வதற்கு அம்பேத்கரை புரிந்து கொண்டால்தான் முடியும்.
பெரியாரை புரிந்து கொண்டால்தான் முடியும். அந்தப் புரிதல் இந்தியாவிலேயே சொல்கிறேன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் மட்டும்தான் அந்தப் பார்வை இருக்கிறது என்பதை பெருமையோடு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என திருமாவளவன் கூறினார்.