பெரம்பலூரில் உற்சவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேஷ வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 28-ஆம் தேதி பங்குனி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. அதன்பின் மட்டையடி 31-ஆம் தேதி காலையிலும், ஊஞ்சல் உற்சவம் இரவிலும் நடைபெற்றது. மஞ்சள் நீர் கடந்த 1-ம் தேதி காலையிலும், விடையாற்றி விழா இரவும் நடைபெற்றது. அதோடு திருவிழா நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து திருத்தேர் 8-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு ஏகந்த சேவை நிகழ்ச்சி மற்றும் பெருமாள் திருமஞ்சனம் செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில் ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெற்றது.
சிறப்பு அலங்காரம் மற்றும் திருமஞ்சனத்தை திருவிக்ரமன் பட்டாச்சாரியார் மற்றும் அர்ச்சகர் பட்டாபிராமன் செய்தனர். அதன்பின் ஸ்ரீதேவி, பூதேவியுடன், உற்சவ பெருமாள் சேஷ வாகனம் போன்று அலங்காரம் செய்யப்பட்டிருந்த வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர். செங்குந்தர் மகாஜன சங்க பொருப்பாளர் சரவணன் தலைமையில், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் நிர்வாகிகள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.