நான் வேலை செய்த தியேட்டரிலேயே என் படம் ஓடுகிறது என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நடிகர் சென்ட்ராயன் கூராயுள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சென்ட்ராயன். இதை தொடர்ந்து ஆடுகளம், மூடர்கூடம், சிலம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
இதை தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் சென்ராயன் கார்த்தி நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான சுல்தான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் நடித்தது குறித்து சென்ட்ராயன் கூறியதாவது, “நான் தியேட்டரில் கைதட்டல் வாங்கி ரொம்ப நாளாச்சு.
பொல்லாதவன், ஆடுகளம் என ஹிட் படங்கள் நடித்து மிகப்பெரிய கைதட்டல் வாங்கிய எனக்கு அடுத்த பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் தவித்து வந்தேன். ஆகையால் நான் திரும்பி எனது சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்றும் கூட நினைத்தேன்” என்று கண்கலங்கி கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தற்போது சுல்தான் படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை பார்க்கும் ரசிகர்கள் கைதட்டி வருகின்றனர். குறிப்பாக நான் வேலை செய்த தியேட்டரிலேயே என் படம் ஓடுகிறது என்பதை நினைக்கும் போது சந்தோஷமாக உள்ளது” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.