விமானத்தினுள் கர்ப்பிணிப் பெண்ணின் குழந்தை முக கவசம் அணியாமல் சாப்பிட்டதால் அந்த குடும்பத்தை விமானத்தில் இருந்து வெளியேறும்படி பணிப்பெண் உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஃப்ளோரிடா விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்பிரிட் ஏர்லைன்ஸில் கர்ப்பிணிப் பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பயணம் செய்வதற்காக ஏறியுள்ளனர். அப்போது விமானத்தினுள் கர்ப்பிணி பெண்ணுடைய இரண்டு வயது குழந்தை சாப்பிடும் போது முகக்கவசம் அணியவில்லை. இதனால் விமானத்தில் இருந்த பணிப்பெண் கர்பிணிப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை உடனடியாக விமானத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் இதை மறுத்தால் போலீசிடம் புகார் அளிப்பேன் என பணிப்பெண் கூறியுள்ளார். இதனைக் கேட்டு விமானத்தில் இருந்து வெளியேற முடியாது என கர்ப்பிணிப்பெண் தெளிவாக பணிப்பெண்ணிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் அங்கு நடைபெற்ற அனைத்து சம்பவத்தையும் யூத பொது விவகார கவுன்சிலை சேர்ந்த யோசி கெஸ்டெட்னர் வீடியோவாக பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து அவர்களுக்கு இடையே நடைபெற்ற வாக்குவாதத்திற்கு பின் கர்பிணிப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் விமானத்தை விட்டு வெளியேறும்படி ஆணையிடப்பட்டுள்ளது. அதன்பின் அவர்கள் புதிய விமானம் மூலம் திரும்பி சென்றதாக கர்ப்பிணி பெண்ணுடைய கணவர் வீடியோ பதிவில் கூறியுள்ளார். மேலும் இது குறித்து ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனம் எந்தவித கருத்தும் வெளியிடவில்லை.